சேலம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மர்மக்கடிதம் வந்ததையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ரயில்வோ கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு நேற்று (செப். 20) ஒரு மர்மக்கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், 'எனக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். எனக்கு ரயில்வே துறையில் வேலை வழங்க வேண்டும். நான் வறுமையில் வாடுகிறேன். என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்.
வண்டி எண் 22652, 12681, 16627, 12675, 12695 ஆகிய ரயில்களில் வெடிகுண்டு வெடிக்கும். வெடிகுண்டுகளை டிஎன் 39 யு 3458 என்ற வண்டியில் கொண்டு வந்து வெடிக்கப்படும். உயிர்ச்சேதம் நூற்றுக்கும் மேல் இருக்கும்,' என்று எழுதப்பட்டு இருந்தது.
இந்த கடிதத்தை ரயில்வே கோட்ட மேலாளர், சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் கொடுத்து புகார் செய்தார். இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சேலம் சூரமங்கலம் மற்றும் டவுன் ரயில் நிலையங்களில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, சந்தேகத்தின்பேரில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்த மணிவேல் (50) என்பவரை சூரமங்கலம் ரயில் நிலைய காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை சட்ட விரோதமாக வாங்கி வெளிச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்தது. இது தொர்பாக அவர் மீது 3 வழக்குகள் இருப்பதும், ஒருமுறை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
அவர், 'என்னைப் பிடிக்காத யாரோ மிரட்டல் கடிதத்தில் என்னுடைய மோட்டார் சைக்கிளின் பதிவெண்ணை குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்கள். எனக்கும் மிரட்டல் கடிதத்திற்கும் சம்பந்தமில்லை,' என்று கூறியுள்ளார். காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.