Skip to main content

புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் மீண்டும் ஒரு கல்மரம் கண்டெடுப்பு!

Published on 12/09/2021 | Edited on 12/09/2021

 

Discovery of a stone again in the Pudukkottai Narimedu area!

 

புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் சின்னங்கள் நிறைந்த இடமாக உள்ளது. தற்போது வேப்பங்குடி ஊராட்சியில் பொற்பனைக்கோட்டை கிராமத்தில் 1.62 கி மீ சுற்றளவுள்ள சங்ககால கோட்டைக்குள் அகழாய்வு செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்து அகழாய்வுக்கு உத்தரவு பெற்ற நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல்துறை அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதியோடு அகழாய்வு இயக்குநராக முனைவர் இனியன் குழுவினர் அகழாய்வு பணிகளைச் செய்து வருகின்றனர். அகழாய்வுப் பணிகளை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

முதல்கட்டமாக அரண்மனை திடலுக்கு வடகிழக்கு பகுதியில் நீர்வாவி குளத்திற்கு வடக்குப் பகுதியில் விவசாயி கருப்பையாவின் நிலத்தில் அகழாய்வு நடந்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 2016 ம் ஆண்டு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் ஒரு கல்மரம் கண்டெடுக்கப்பட்டு புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த கல்மரம் கடந்த மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற புதுகை பாண்டியன் மீண்டும் நரிமேடு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட போது அங்கே மேலும் ஒரு கல்மரம் கண்டெடுத்துள்ளார். கண்டெடுக்கப்பட்ட கல்மரம் பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குநர் இனியனிடம் ஒப்படைத்துள்ளார். இந்த கல்மரம் மண்ணியல் ஆய்வுக்குப் பிறகு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

நரிமேடு பகுதியில் அடுத்தடுத்து கல்மரங்கள் கிடைத்து வருவதால் ஆய்வாளர்களின் பார்வை நரிமேடு பக்கம் திரும்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்