கடல் சீற்றம் காரணமாக வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு கடைகள் மற்றும் குடியிருப்புக்குள் கடல்நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாகப்பட்டினம் கடற்கரை பகுதி சீற்றமாக காணப்பட்டது. குறிப்பாக நாகை அருகே உள்ள வேளாங்கண்ணி கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக சுமார் 50 அடி தூரத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் உட்புகுந்து கரைகளைச் சேதப்படுத்தியிருந்தது.
கடற்கரை அருகிலிருந்த கடைகள் அனைத்தும் மேடான பகுதிக்கு கொண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹரிமாஸ் விளக்குகள், கடலோர காவல் குழும உயர்கோபுர மேடை என பல இடங்களும் சேதமடையும் நிலையில் உள்ளது. அதேபோல, ஆரிய நாட்டுத் தெரு மீனவர் குடியிருப்புப் பகுதிகளிலும் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
"புயல் வெள்ள காலங்களில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டுவருவதால், தமிழக அரசு கடற்கரை ஓரங்களில் கருங்கல்லால் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்," என்கிறார்கள் கடற்கரை வியாபாரிகள் மற்றும் மீனவ கிராம மக்கள்.