Skip to main content

கொள்ளையை தடுக்க சென்ற காவல்துறை! பெட்ரோல் குண்டு வீசிய 20 பேர் கொண்ட கும்பல்!  

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

Police went to prevent robbery

 

கடலூர் மாவட்டம், காயல்பட்டு மற்றும் பெரியகுப்பம் என்ற கிராமங்களில் அமைந்து உள்ளது சிப்காட் பகுதி-3. இங்கு 1700 ஏக்கர் நிலப்பரப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நடைபெற்று வந்தன. ஏறத்தாழ 75 சதவீத பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கடந்த 2011ஆம் ஆண்டு வீசிய தானே புயல் காரணமாக இந்த தொழிற்சாலை பெரும் பாதிப்புக்குள்ளானது. அதன் காரணமாக தொழிற்சாலை நிர்வாகம் இந்த தொழிற்சாலை பணிகளை கைவிட்டது. ஆனாலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்த தொழிற்சாலை வளாகத்திற்குள் இருந்த நிலையில், தொழிற்சாலை காவலர்கள் அதனை பாதுகாத்து வந்தனர். 


சமீப காலமாக இந்த தொழிற்சாலைக்குள் இருக்கும் பொருட்களை கொள்ளையர்கள் இரவு பகல் பாராமல் பல்வேறு இடங்கள் வழியாக உள்ளே புகுந்து கொள்ளை அடித்து வந்தனர். இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகம் அளிக்கும் புகாரின் பேரில் போலீஸார் அப்போது சென்று தொழிற்சாலைக்குள் கொள்ளையர்களை விரட்டுவது அவர்களை கைது செய்வது மற்றும் பொருட்களை மீட்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 


இந்த நிலையில், இன்று அதிகாலை தொழிற்சாலையில் கொள்ளையர்கள் புகுந்து உள்ளதாக தொழிற்சாலை காவலர்கள் புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை தொடர்ந்து புதுச்சத்திரம் போலீசாரும், தொழிற்சாலை காவலர்களும் கொள்ளையர்கள் இருக்கும் பகுதிக்கு சென்றனர். அப்போது 20 கொள்ளையர்கள் அந்த பகுதியில் இருந்து திடீரென போலீஸார் மீது பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசினர். ஆறு குண்டுகள் அந்த பகுதியில் வீசப்பட்ட நிலையில் போலீசார் இருந்த இடத்தின் சற்று முன்னதாகவே அந்த குண்டுகள் விழுந்து வெடித்தது. 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்த நிலையில் போலீசார் தொடர்ந்து கொள்ளையர்களை துரத்திச் சென்றனர் இதில் 20 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 


இருந்தாலும் போலீசார் அங்கு வெடிக்காமல் இருந்த 3 பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றினர். புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஹாத்தியா’ எனப்படும் பெட்ரோலிய நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டது. சுமார் 50,000 கோடி மதிப்பீட்டில் இங்கு புதிய தொழிற்சாலை அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இதுபோன்று நடைபெற்று வரும் சம்பவங்கள் இந்த பகுதியில் தொழிற்சாலை வருமா என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்