துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாலிடெக்னிக் மாணவர் முகேஷின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை தாம்பரம் அருகே முகேஷ் என்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முகேஷ் காயமடைந்த நிலையில், அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
முகேஷை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடிய விஜய் என்ற இளைஞரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இளைஞர் விஜய் சரணடைந்தார். சம்பவம் குறித்து நீதிபதியிடம் கூறிய விஜய், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வண்டலூர் அருகே குப்பை தொட்டியில் துப்பாக்கி கிடைத்ததாகவும், அதனை மண்ணில் புதைத்து வைத்திருந்ததாகவும், தீபாவளி பண்டிகைக்காக அந்த துப்பாக்கி எடுத்து வைத்திருந்தேன். துப்பாக்கியை விளையாட்டாக முகேஷின் நெற்றியில் வைத்து சுட்ட போது, வெடித்ததாகவும் கூறினார். மேலும் துப்பாக்கியை கடலில் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து விஜய்யை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் பிரேதப் பரிசோதனை முடிவடைந்து இன்று மாலை முகேஷின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.