Skip to main content

தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு... முன்ஜாமீன் கோரிய எஸ்.வி.சேகர்!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

sve sekar applied for Pre-bail

 

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவிப் போர்வைப் போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்திருந்தார். 
 

அதற்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத்தான், ஆகஸ்டு 15 -ஆம் தேதி ஏற்றப் போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு, வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றப் போகிறாரா? என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார். 
 

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி, சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க. நிர்வாகி எஸ்.வி சேகர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், இணையவழியில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

 

இந்தப் புகாரின் அடிப்படையில், தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம், பிரிவு 2- இன் கீழ் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னைக் கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கோரி, எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
 

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் ஆகஸ்ட் 24 -இல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்