மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் கடந்த 17.06.2024 அன்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''உபகரணங்கள் வாங்குவதற்கு பதிலாக, பாதுகாப்பிற்கு செலவு செய்வதற்கு பதிலாக, ஆடம்பர வீடுகள் கட்டுவதும், சுற்றுலா மாளிகை கட்டுவதும், அந்தச் சுற்றுலா மாளிகை பங்களா வீடுகளுக்கு விலை உயர்ந்த பர்னிச்சர்களை வாங்குவதிலும் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள இடத்தில் இவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஆனால் மெத்தனபோக்கோடு இப்படி விபத்துகளை தொடர்ந்து பாஜக அரசு அனுமதித்து இருக்கிறது.
காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகவும், ரயில்வேதுறை அமைச்சராகவும் இருந்த ஓ.வி.அழகேசன் அரியலூர் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்தார். சாஸ்திரியும் ராஜினாமா செய்திருக்கிறார். மம்தா பானர்ஜியும் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த பொழுது விபத்து நடத்தவுடன் ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது ராஜினாமா செய்தார். ஏன் பாஜக அமைச்சர்கள் மட்டும் ராஜினாமா செய்ய மறுக்கிறார்கள். பிடிவாதமாக இருக்கிறார்கள். அதிகார வெறி என்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட விபத்துக்களை தவிர்க்க வேண்டும். சிஏஜி அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் லட்சக்கணக்கான கோடி நிதியை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்''என்றார்.