கோவை மாவட்டம் முழுவதும் விவசாயச் சட்டங்களின் நன்மைகள் குறித்து பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டுவந்தார். இந்நிலையில் இன்று இறுதியாக, கருமத்தம்பட்டியில் விவசாயச் சட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
'தமிழக மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை, தேர்தல் நேரத்தில் மக்களுக்கு 2,000 ரூபாயாகக் கொடுப்பதுதான் தமிழக அரசியல். 2,000 ரூபாயை நம்பி 5 வருடத்தை மக்கள் அடகு வைத்துவிடக்கூடாது. பா.ஜ.க விற்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் தலைக்கு மேல் சீரியல் லைட் வைத்திருப்பவர்கள், காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள்தான் உங்களுக்கு அரசியல்வாதிகளாக வாய்ப்பார்கள்.
சீமான், கமல் போன்றவர்களை மக்கள் நம்பக் கூடாது, காங்கிரஸ் போன்ற கட்சிகளையும் மக்கள் நம்பக் கூடாது. 2021 சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது பாசம் கொண்டவர். தமிழகத்திற்கு அவர் வந்தால் வேட்டிதான் கட்டுவார். திமுக எம்.பிகள் டெல்லிக்கு விமானத்தில் சென்று நாடாளுமன்ற கேன்டீனில் சாப்பிட்டுவிட்டுத் தூங்குகின்றனர். இங்கு வந்து பிரதமர் மோடி சரியில்லை என்று பேசுகின்றனர். திமுக எம்.பிக்களுக்கு தைரியம் இருந்தால் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்.
மூன்று விவசாயச் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகளைக் காக்கவே இந்தச் சட்டங்களை பிரதமர் கொண்டுவந்துள்ளார் என்றார்.