திருவண்ணாமலையில் பாஜக மாநில தலைவர் முருகன் நடத்திய வேல் யாத்திரையின் பாதுகாப்புக்காக சுமார் 1,000 போலீஸார் நகரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 5 மணிக்கு முருகன் மேடையேறி வெற்றிவேல், வீரவேல் என முழங்கி தொண்டர்கள் முன் பேசத்துவங்கினார். அவர் பேசி முடிக்கும்போது, மேடையில் ஏறிய டி.எஸ்.பி, இரண்டு இன்ஸ்பெக்டர்கள், சார் வேன் நிறுத்தியிருக்கோம் வந்து ஏறிக்குங்க என்றனர். எங்க கட்சியின் மாநில நிர்வாகிகளை அந்த வேனில் ஏத்திக்குங்க, பின்னாடி நான் வந்து ஏறிக்கறேன் எனச்சொல்ல அதன்படி ஏற்றினர். மேடையில் இருந்து முருகனை கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு மடம் ஒன்றில் கொண்டு சென்று அமரவைத்தனர். அவரோடு 500க்கும் அதிகமான கட்சியினர் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டனர்.
இரவு 6.45 மணியளவில் கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார் முருகன். தொண்டர்கள் வரிசையாக வந்து அவரை சந்தித்தனர். அந்த இடத்தில் தொண்டர்கள் யாரும் முகத்தில் மாஸ்க் அணியவில்லை. அதோடு தனிமனித இடைவெளி சுத்தமாக கடைப்பிடிக்கவில்லை. நிர்வாகிகளுடன் அமர்ந்திருந்த முருகன், நான் கிளம்பறேன் என காவல்துறை அதிகாரி ஒருவரிடம் சொன்னார். இன்ஸ்பெக்டர் ஒருவர் வேகவேமாக வெளியே சென்று முருகன் காரை கொண்டு வந்து அந்த மடத்தின் வாசலில் நிறுத்தச்சொன்னார், கார் வந்து நின்றதும், உங்க கார் ரெடியா இருக்கு சார் என பவ்யமாக வந்து சொன்னார். முருகன் மடத்திற்குள் இருந்து வெளியே வந்தவர், காரில் ஏறி தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றுவிட்டார்.
காவல்துறையின் மேலிடத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட அதிகாரிகளுக்கு வந்த உத்தரவே, பாஜக தலைவர் முருகனை மரியாதையோடு நடத்துங்கள், கைது செய்யும்போதும் அவர் மீது போலீஸ் கை வைக்கக்கூடாது. அவரை நெருக்கக்கூடாது என கண்டிஷன் போட்டுள்ளனர். அவர் பேசி முடித்ததும் அவரை கைது செய்யுங்கள். கைது செய்து தங்கவைக்கும் இடத்தில் அவர் விருப்பப்படி நடந்துக்கொள்ள விடுங்கள் என உத்தரவு வந்துள்ளது. இதனால்தான் முருகன் முன், மிக பவ்யமாகவே அதிகாரிகள் நடந்துகொண்டனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
படங்கள்: விவேகானந்தன்