தேவேந்திரகுல வேளாளர் சங்கம் என்ற பெயரில் நெல்லையில் பரவலான பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் நெல்லை பா.ஜ.க.வினரைக் குழப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் நாம் தனித்து இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி என்று கட்சியின் தேசிய தலைமை முடிவு எடுத்தால் நான் ராஜினாமா செய்வேன். சாதாரண தொண்டனாகப் பணியாற்றுவேன் என்று பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது அக்கட்சியின் மட்டத்தில் சூட்டைக் கிளப்பியதோ இல்லையோ. எதிர்வினைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
கட்சியின் சீனியர் தலைவர்களான வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் அண்ணாமலையின் பேச்சைப் பற்றி கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் மாநில து.தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன், கூட்டணி பற்றி கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு எடுக்க முடியுமே தவிர அண்ணாமலைக்கு அதிகாரமில்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் அண்ணாமலைக்கான ஆதரவு தெரிவிக்கும் பொருட்டும், அவரது பேச்சை அங்கீகரிக்கிற வகையில், தாமரையை தமிழகத்தில் 40ம் மலரச் செய்வோம் என்கிற போஸ்டர் நெல்லை பா.ஜ.க.வினரைக் கலக்கியிருக்கிறது. இந்தப் போஸ்டர் வெளியிட்டது யார் என்று தெரியாமல் நெல்லை பாஜக கலகலத்து குழம்பிப் போயிருக்கிறது.