தமிழ்நாட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட 'எண்ணித் துணிக' என்ற நிகழ்ச்சி சென்னை ஆளுநர் மாளிகையில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை அம்மாசியப்பன் என்பவர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சார்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். எனவே, நீட் தேர்வில் இருந்து எப்போது விலக்கு அளிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஆளுநர், நீட் தேர்வு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அம்மாசியப்பன் செய்தியாளர்களைச் சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பேட்டி அளித்தார். நீட் தேர்வு குறித்த மசோதா ஜனாதிபதியிடம் உள்ள நிலையில் தமிழக ஆளுநர் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில், ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய சேலம் உருக்காலை ஊழியர் அம்மாசியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சண்முகநாதன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் உருக்காலை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் வெளியே வந்த சண்முகநாதன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “ கடந்த 12ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் உரையாடிய போது அம்மாசியப்பன் நீட் தேர்வு தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதன் பின்னர், தான் ஒரு அரசு ஊழியர் என்பதனை மறந்து சட்டவிதிகளை மீறி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இது அரசு ஊழியருக்கான விதி மீறிய செயல் ஆகும். மேலும், அம்மாசியப்பன் அரசு வேலையில் சேரும் போது போலியான இருப்பிட சான்றிதழை சமர்ப்பித்து பணிக்குச் சேர்ந்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அம்மாசியப்பன், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தோர்க்கான இடஒதுக்கீட்டின் மூலமாக பணியில் சேர்ந்துள்ளார். அதனால், அம்மாசியப்பனை அரசு பணியில் இருந்து பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்காலை நிர்வாக இயக்குநரிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். அவரை பதவி நீக்கம் செய்யாவிட்டால் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்துவோம்” என்று கூறினார்.