காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தைப் பகிர்ந்த காரணத்திற்காக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் படத்தைப் பகிர்ந்ததன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ட்விட்டர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்கிடையே நேற்று (11.08.2021), தங்களது கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், தற்போது தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்குப் பாஜகதான் காரணம் என எதிர்க்கட்சிகள் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில், “இதற்கு பாஜக காரணம் இல்லை” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது, ''ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்குப் பாஜக காரணம் இல்லை. இதை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தலையிடமாட்டோம். விசாரணை நேர்மையாக இருக்க வேண்டும். எல். முருகன் எந்த மாநிலத்திலிருந்து எம்.பியாக தேர்வு செய்யப்படுவார் என்பதை பாஜக மத்திய தலைமையே அறிவிக்கும். குழு அமைத்துள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பயணிப்போம்.'' என்றார்.