தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை கோவை டாடாபாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது வாக்கை பதிவு செய்ய கோவை தெற்குத்தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் வருகை தந்தார். அங்கு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் அவரால் வாக்குச் செலுத்த முடியவில்லை. பின், அவரது பெயர் அருகே இருந்த சி.எம்.எஸ். பள்ளியில் இருப்பது தெரியவந்ததும் அங்கு வாக்களிக்க வானதி ஸ்ரீனிவாசன் புறப்பட்டார். மாநகராட்சியில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதால் அவரது பெயர் வேறு வாக்குச்சாவடிக்கு மாறியதாகக் கூறப்படுகிறது.
பின், சி.எம்.எஸ். பள்ளியில் வாக்களித்து விட்டு வெளியே வந்த வானதி ஸ்ரீனிவாசன், "வாக்காளர்களுக்கு ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாகவும், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.