தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப் பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8ஆவது வார்டில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணிடம் ஹிஜாப்பை கழட்டிவிட்டு வாக்களிக்குமாறு பாஜக முகவர் கிரிராஜன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிராஜனின் இந்தச் செயலுக்கு அங்கிருந்த திமுக, அதிமுக முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பாஜக பிரமுகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கிரிராஜன் தொடர்ந்து தேர்தல் அலுவலர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கிரிராஜனை அங்கிருந்து வெளியேற்றினர். இதையடுத்து, அரைமணி நேரம் நிறுத்திவைக்கப்பட்ட தேர்தல் பாஜகவிற்கு மாற்று முகவர் வந்த பிறகு மீண்டும் தொடங்கியது.