சேலத்தில், வாடகைக்கு குடியேறிய 6 கோடி ரூபாய் வீட்டை அபகரிக்கும் நோக்கில், உரிமையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. பிரமுகர் மீது மூதாட்டி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சேலம் செரி சாலையைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (77). இவர், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசிக்கிறார். டிச. 18ம் தேதி, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியுள்ளதாவது: என்னுடைய தாயார் பாகீரதியுடன் பிறந்தவர்கள் சீனிவாசமூர்த்தி மற்றும் ராஜாராவ். இவர்களில் சீனிவாசமூர்த்திக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருக்கு விவேகானந்த், முரளி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் முரளி இறந்து விட்டார். ராஜாராவ், ஸ்டேட் வங்கியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் ராஜாராவ், சூரமங்கலத்தில் உள்ள ஸ்டேட் வங்கிக் காலனியில் 1997ம் ஆண்டு, ஒரு அடுக்குமாடி வீட்டை வாங்கினார். தற்போது அதன் மதிப்பு 6 கோடி ரூபாய் ஆகும். திருமணம் செய்து கொள்ளாத அவர், அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். இந்நிலையில், 2021ம் ஆண்டு ராஜாராவும் இறந்துவிட்டார். அந்த வீட்டுக்கு நானும், சீனிவாசமூர்த்தியின் மகன் விவேகானந்தும்தான் சட்டப்படியான வாரிசுகள். அந்த வீட்டின் மேல் தளத்தில் பிரகாசம் என்பவரும், கீழ் தளத்தில் சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ.க. கலாச்சார அணியின் தலைவரான ராஜாராம் என்பவரும் வாடகைக்கு வசிக்கின்றனர்.
பாஜக பிரமுகர் ராஜாராம் வீட்டு வாடகை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். இதனால் வீட்டை காலி செய்துவிடும்படி அவரிடம் கூறினேன். ஆனால் அவரோ வீட்டை காலி செய்யாமல், என்னை ஆபாச வார்த்தைகளால் பேசி விரட்டி அடித்தார். அவருடைய கூட்டாளி ரவீந்திரன் என்பவருடன் சேர்ந்துகொண்டு, போலி ஆவணங்கள் மூலம் எங்கள் வீட்டை அபகரிக்கப் பார்க்கின்றனர். இதற்கிடையே, அந்த வீட்டை விற்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பா.ஜ.க. பிரமுகர் ராஜாராமிடம் கேட்டால், உன்னை கொன்று தூக்கில் கட்டித் தொங்க விட்டுவிடுவோம் என மிரட்டுகிறார். எனக்கும், விவேகானந்துக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு ராஜாராமும், அவருடைய கூட்டாளியும்தான் பொறுப்பாவார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீது விசாரணை நடத்தும்படி சூரமங்கலம் காவல்நிலைய காவல்துறைக்கு ஆணையர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.