டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் புதிய மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழா இன்று (07/07/2021) மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது. இதில், 43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் பா.ஜ.க.வின் தமிழக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநயாகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் பின்னணி குறித்து பார்ப்போம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்துள்ளார். பா.ஜ.க.வின் மாநில தலைவராக பதவி வகித்து வருகிறார்.