பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மனு சாஸ்திரத்தில் உள்ளதை குறிப்பிட்டு பேசிய தன்னுடைய 41 நிமிட உரையில் 40 நொடியை மட்டும் துண்டித்து பரப்பி, தான் பெண்களை இழிவுபடுத்துவதாக அவதூறு பரப்புகின்றனர் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சீமான், வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனத்தை பதிவு செய்திருக்கும் நிலையில், திருமாவளவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை கைவிட வேண்டும் என அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலினும் ஆதரவு குரல் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன் பெண்களை இழிவுபடுத்தும் ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் வெளியில் நடமாட முடியாது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ''பெண்களை தவறாக பேசியவர்களை வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு எங்களுடைய தாய்மார்கள் தக்க நேரத்தில் தக்க விதத்தில் சரியான கவனிப்பு கவனிக்க காத்திருக்கிறார்கள். நீங்கள் எங்கு சென்றாலும் தமிழக சகோதரிகள் உங்களுக்கு சிறப்பான ஒரு வரவேற்பை அவர்களுடைய பாணியில் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். நீங்கள் வெளியே செல்ல முடியாது. வெளியில் நடமாட முடியாது'' என்றார்.