
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, சிவகாசியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா ஆகியோர் தலைமையில் இன்று உண்ணாவிரதம் போராட்டம் நடக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி –
“கர்நாடக தேர்தலை மனதில் வைத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தாமதப்படுத்தலாம். ஆனால், தமிழகத்துக்கு சாதகமான நிலை ஏற்படும்வரையிலும் அதிமுக போராடும். மத்திய அரசு கூறும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் தமிழகத்துக்கு இல்லை. தமிழகத்தின் உரிமைக்காக, தார்மீக உரிமையோடு அதிமுக போராடுகிறது. தமிழக அரசுக்கு மத்திய அரசு நன்மை செய்தால், அதற்கு தமிழக அரசு ஆதரவளிக்கும். எப்போதெல்லாம் மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறதோ, அப்போதெல்லாம் அதனை எதிர்த்து தமிழக அரசு போராடும்.
தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் கட்சி அதிமுக. தமிழர்களை ஏமாற்றும் கட்சி திமுக. ஒரு மாநிலத்தின் பிரச்சனைக்காக 19 நாட்கள் பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படும் வரலாற்றை அதிமுக செய்து வருகிறது. மத்திய அரசின் ஆட்சியாளர்களே அரண்டுபோகும் அளவுக்கு மாநிலங்களவையும் மக்களவையும் முடக்கப்பட்டு வருகிறது.” என்றார்.
ஐந்து மாதங்களுக்கு முன், “டெல்லி நம்மகிட்ட இருக்கு.. மோடி நமக்கு இருக்காரு.. எல்லாத்தயும் மேல இருக்கிறவரு பார்த்துக்குவாரு..” என்று பிரதமர் நரேந்திரமோடியை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, “தமிழகத்துக்கு நன்மை செய்தால்தான் ஆதரவு!” என, இன்று பேசியிருப்பதை, நம்பலாம்தானே!