
பாஜக செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன் கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், மதங்கள் குறித்து அவதூறு கருத்துகளை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையான நிலையில் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கல்யாணராமன் மீது பதியப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து, பிற மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட மாட்டேன் என பிரமாணப் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டது.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டும் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தை மீறி, இரு மதத்தினர் இடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் கல்யாணராமன் பேசியிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவிலும், பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி கல்யாணராமன் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு நேற்று சென்னை எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிரிஜா ராணி, கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். ஆனால், 2021 அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 2022 மார்ச் 22 ஆம் தேதி வரையில் கல்யாணராமன் சிறையில் இருந்த நாட்கள் தண்டனைக் காலத்தை விட கூடுதலாக இருப்பதால் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.