கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் சுமதி (49). கடலூர் மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா தலைவராக உள்ள இவர் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி தனது வீட்டின் சுவரில் விளம்பரம் எழுதியிருந்தார். நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் அந்த விளம்பரத்தை அழித்துவிட்டு, தட்டிக்கேட்ட சுமதியையும் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதையடுத்து பா.ஜ.க கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் கட்சியினர் நேற்று மாலை நெல்லிக்குப்பம் காவல் நிலையம் சென்று சுமதி தாக்கப்பட்ட சம்பவம் மற்றும் வழக்கு குறித்து விசாரித்துவிட்டு மீண்டும் கடலூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
காராமணிக்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் காரை வழிமறித்து, கல்வீசி கண்ணாடியை தாக்கி உடைத்துவிட்டு தப்பி ஓடியது. இதில் நிர்வாகி பெருமாள் காயமடைந்தார். இதையடுத்து அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் தலைமையில், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னா, தவச்செல்வம் ஆகியோர் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கார் கண்ணாடியை உடைத்து, பா.ஜ.க நிர்வாகி தாக்கப்பட்டது குறித்து அறிந்த பா.ஜ.கவினர் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் நேற்று மாலை கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு வந்த கடலூர் புதுநகர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதானப்படுத்தியதால் கலைந்து சென்றனர்.