அண்மையில் சென்னை பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு 100 அடி உயரம் கொண்ட பா.ஜ.க. கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட இருந்தது. அனுமதியின்றி அக்கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் அந்தக் கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக ஜே.சி.பி. வாகனம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் ஜே.சி.பி. வாகனத்தைச் சேதப்படுத்த முயன்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே பா.ஜ.க.வினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தாக்கியதாகவும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி கடந்த 22 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் வந்தபோது, அமர் பிரசாத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அடுத்ததாக ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அமர் பிரசாத் தரப்பு தெரிவித்துள்ளது.