"மத்திய பா.ஜ.க. அரசு இந்திய மக்களின் வாழ்வியல் நிலையைக் கவனிக்க வேண்டும். இந்த கரோனா காலம் எல்லோரையும் அப்படியே புரட்டிப் போட்டுள்ளது. சாதாரண ஏழை தொழிலாளி முதல் விவசாயிகள், சிறு குறு தொழில் புரிவோர் வரை அனைவரும் பொருளாதார சரிவில் சிக்கி திணறிக் கொன்டிருக்கிறார்கள். குறிப்பாக வங்கிக் கடன், வட்டி தொகையால் வாழ்க்கையே மூழ்கும் நிலைக்கு போய்விட்டது" என இப்படி வெளிப்படையாகக் கூறுபவர்கள் ஏதோ எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளும் குரல் கொடுக்க தொடங்கிவிட்டது.
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா அறிக்கையாக வெளியிட்டுள்ளார் அதில்,
"கரோனா வைரஸ், உலகம் முழுதும் பெருந்தொற்றாகப் பரவி, பல துன்பங்களையும், பெருமளவு உயிர் சேதத்தையும் விளைவித்து வருகிறது. நம் நாட்டில், அரசு, பல கட்டங்களாக ஊரடங்ககை அமல்படுத்தி, கரோனா தொற்றைத் தடுக்க முயற்சித்து வருகிறது.
ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாலும், நிதி நெருக்கடி ஏற்பட்டதாலும் நிவாரணம் வழங்கும் வகையில் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான கடன் தவணைகளைச் செலுத்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை சலுகை வழங்கப்பட்டது. இந்தச் சலுகை என்பது ஆறு மாதங்களுக்கும் கடன் தவணை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக பலரும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால், ஆறு மாதத்திற்கான கடன் தவணைகளை தாமதமாகச் செலுத்துவதற்கு கொடுக்கப்பட்ட கூடுதல் கால அவகாசம் மட்டுமே.
இதுவரை கடன்கள் ரத்து செய்யப்படுவதாக அரசு சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதைவிட ஆறு மாதங்களுக்கும் வட்டிகூட ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இதை எல்லோரும் தவிர்த்துவிட முடியாது. நெருக்கடியைச் சமாளிக்க இந்தச் சலுகையைப் பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே அடுத்து இனி ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் ஒட்டுமொத்தமாகச் சுமை அதிகரிக்கும்.
இந்த ஆறுமாத காலத்திற்கு கடன்களை ரத்துசெய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. வட்டித் தொகையாவது ரத்து செய்யலாம். செய்ய வேண்டியது கட்டாயம் தான். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் ரிசர்வ் வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், “கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டது. கடனை தாமதமாகச் செலுத்துவதற்கான அவகாசம் மட்டுமேதவிர கடன் தள்ளுபடி அல்ல. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஏற்ப கடன்தொகை மாறுவதால் வட்டி விவகாரத்தில் வங்கிகளே முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடன் பெற்றவர்களுக்கு சுமையைக் குறைக்க மட்டுமே இந்தக் கால அவகாசம் உதவும்” என்று தெரிவித்துள்ளது.
''தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூலம் பெறப்பட்ட கடன் தவணைகளுக்கு இந்த ஆறு மாதகாலத்திற்கு வட்டித்தொகை முழுவதையும் ரத்து செய்யவேண்டும். பிரதமர் மோடி அரசு இதைச் செய்யும் என நம்புகிறோம்" என யுவராஜா கூறியிருக்கிறார்.
கரோனா வைரஸை விரட்டுகிறோம் எனச் சொல்லி வீட்டிலேயே இரு.. விலகியே இரு.. வெளியே வராதே என ஊரடங்கு போட்டுவிட்டு தொழில் முடக்கம், வேலையின்மை, உற்பத்தி நிறுத்தம் என எல்லாவற்றையும் செய்துவிட்டு பிழைப்புக்கே போராட வைத்துவிட்டு வழக்கமா வாழ்க்கை நடத்துவது போல வாங்கிய கடனுக்கு வட்டியோடு கட்டு எனக் கூறினால் எந்த வகையில் நியாமுங்கோ மோடி சர்க்காரே...?