Skip to main content

கேள்விக்கு என்ன பதில்? - பாஜக மத்திய அமைச்சர் கூட்டத்தில் ஏற்பட்ட அரைகுறை இந்தி குளறுபடி

Published on 05/11/2022 | Edited on 05/11/2022


புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கபில் மோரேஸ்வர் பட்டேல் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்த பின் ஆங்காங்கே பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிளுடன் கலந்தாலோசனைக் கூட்டங்களையும் நடத்தினார். அறந்தாங்கியில் நடந்த கூட்டத்தில் 2024 தேர்தலில் மத்திய அரசு என்ன செய்தால் வெற்றி பெற வைக்கலாம்? உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள் என்றார். மத்திய அமைச்சர் இந்தியில் பேசியதை பாஜக நிர்வாகி ரமேஷ் தமிழ் மற்றும் இந்தியில் மொழிபெயர்த்து கூறினார்.

 

கேள்வி :மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றியதை மாநில அரசு அதிகாரிகள் சொல்ல மறுக்கிறார்கள். அதிகாரிகளிடம் நமக்கு தகவல் தர வைக்க வேண்டும் என்றார் ஒரு பாஜக நிர்வாகி.

 

இந்தக் கேள்விக்கான பதில் சொல்லவில்லை.

 

கேள்வி : பாரதப் பிரதமரின் ஆண்டுக்கு ரூ.6000 விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தில் தற்போது ரூ.2000 பணம் ஏற்றப்படவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி சரி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

 

மத்திய அமைச்சர் பதில் : யாரேனும் தவறான தகவல் கொடுத்து ரூ.2000 பெற்றால் சொல்லுங்கள் டெல்லியிலிருந்தே நிறுத்திவிடுவோம் என்றார். 

 

(கேள்வியை சரியாக மொழி பெயர்க்காததால் கேள்வி ஒன்று பதில் மற்றொன்றானது)

 

கேள்வி (மாஜி வட்டாரத் தலைவர் முருகேசன்) : பாரதப் பிரதமர் திட்டங்கள் சரியாக நடைபெறவில்லை. இருட்டடிப்பு செய்றாங்க. புதுகை , ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முழு பாசன வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மத்திய அமைச்சர் : நல்ல திட்டங்கள் 3 சொல்லுங்கள். லோக்கல் பிரச்சனைகளை மனுக்களாகக் கொடுங்கள் என்றார்.

 

கேள்வி : புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியில் நெல், தேங்காய் அதிக உற்பத்தி ஆகிறது அதனை மதிப்புக்கூட்டும் தொழிற்சாலை இல்லை. மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகள் இருந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், விவசாயிகளுக்கு கட்டுபடியான விலையும் கிடைக்கும்.

 

அமைச்சர் பதில் : தனியார் நபர்கள் தொழிற்சாலை ஏற்பாடு செய்தால் மானியம் வழங்கப்படும். நமது கட்சிக்காரர்கள் தொடங்கினால் முழு உதவியும் செய்யப்படும்.

 

செந்தில்குமார் : புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரக்காடுகளை அழித்து பல்மரக்காடுகள் வளர்க்கனும்.

 

மத்திய அமைச்சர் பதில் இல்லை.

 

அர்ச்சுனன் மாவட்ட துணைத் தலைவர் : மீனவர்கள் அதிகமுள்ள மாவட்டமான ராமநாதபுரத்தில் மீன்வளக் கல்லூரி அமைக்க வேண்டும்.

 

மத்திய அமைச்சர் : மத்திய அரசின் மீன்வளத்துறை நலத்திட்டங்கள் பலனளிக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்

 

அர்ச்சுனன் : நாட்டுப் படகுக்கு எதுவும் கிடைக்கல, விசைப்படகுக்கு நாகை மாவட்டத்தில் கிடைக்குமளவிற்கு புதுகை மாவட்ட மீனவர்களுக்கு கிடைக்கல.

 

மத்திய அமைச்சர் : மீன்வளத்துறையில் விசாரித்து நலத்திட்டங்களை பெறுங்கள்.

 

(மீன்வளக் கல்லூரி பற்றி எந்த பதிலும் இல்லை)

 

இப்படி கேட்கப்பட்ட கேள்விகளை இந்தியில் மொழிபெயர்த்து கூறியதில் ஏற்பட்ட குளறுபடியால் கேள்வி ஒன்றும் பதில் வேறு ஒன்றுமாக அமைந்திருந்தது.

 

நம்ம திட்டங்களை கொண்டு போய் சேர்ப்பீங்களா? என்று கூட்டத்தைப் பார்த்து கேட்ட மத்திய அமைச்சர் அங்கிருந்து அடுத்த ஆய்வுக்குக் கிளம்பினார்.

 

 

சார்ந்த செய்திகள்