Skip to main content

நன்கொடை கேட்ட பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கைது; கார்கள் பறிமுதல்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

nn

 

கட்சிக்கான நிதி என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவின் மாநில நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டது சூட்டைக் கிளப்பியுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிகுளம் - வேலன் புதுக்குளம் சாலையில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கிரஷ்ஷர் கற்கள் எம்.சாண்ட் தயாரிப்பதாகச் சொல்லப்படுகிறது. நகரின் முக்கிய புள்ளிகள் சிலருக்குச் சொந்தமான அந்த கல்குவாரியில் அளவுக்கதிகமான லோடுகள் அனுப்பப்படுவது ஊரறிந்த ரகசியம் என்கிறார்கள். இதன் மேலாளராக நவீன்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம், சாத்தான்குளம் ஆனந்தவிளையைச் சேர்ந்த சித்த மருத்துவரும் பாஜக மாநில இளைஞரணிச் செயலாளருமான பூபதி பாண்டியன் மற்றும் பா.ஜ.க.வின் மாநில இளைஞரணிச் செயற்குழு உறுப்பினருமான திருச்செந்தூரை சேர்ந்த ஜெய ஆனந்த் என்ற சரண் இருவரும் கல்குவாரிக்கு கார்களில் வந்தவர்கள் அங்கு பணியிலிருந்த மேலாளர் நவீன்குமாரிடம் முதலாளி எங்கே என்று கேட்டிருக்கிறார்கள். அவர் இல்லை என்று தெரிந்ததும் மேலாளர் நவீன்குமாரிடம் கட்சிக்கான நன்கொடை மற்ற இடங்களில் தருகிறார்கள். நீங்களும் தர வேண்டும் என்று கேட்டுள்ளனராம். அதற்கு அவர் மறுக்கவே, ஆவேசமான இரு நிர்வாகிகளும் நவீன்குமாரை அவதூறாகப் பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனராம்.

 

இதுகுறித்து கல்குவாரி மேலாளர் நவீன் குமார், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். புகாரின்படி காவல் நிலைய ஏட்டு ஜெயஸ்ரீ வழக்குப்பதிவு செய்ய, இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் எஸ்.ஐ. சுரேஷ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி பா.ஜ.க.வின் மாநில இளைஞரணிச் செயலாளரான பூபதி பாண்டியன் மற்றும் பா.ஜ.க. மாநில இளைஞரணிச் செயற்குழு உறுப்பினர் ஜெய ஆனந்த் இருவரையும் கைது செய்ததுடன் அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் பின்னர் இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர்.

 

இந்நிலையில் எதிர் புகாராக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெய ஆனந்தும் புகார் கொடுத்திருக்கிறார். அதில் அவர், ‘நாங்கள் இருவரும் காரில் சென்றபோது குவாரி லாரியிலிருந்து கல் விழுந்ததில் தங்கள் கார் சேதமானதாகவும் எனவே லாரியைப் பின்தொடர்ந்து சென்று கல்குவாரி உரிமையாளரிடம் கார் சேதமானது தொடர்பாக பணம் கேட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்