மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக 'எதிர்த்து நில்' மாநாடு திருச்சியில் உழவர் சந்தையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் போலிஸ் தரப்பில் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஏகப்பட்ட கடுமையான நிபர்ந்தனைகளுடன் மாநாட்டிற்கு அனுமதி கொடுத்தனர்.
இந்த மாநாட்டை துவக்கி வைத்து அருந்ததிராய் பேசும் போது.. ‘’பாபர் மசூதி இடிப்பு சம்பவம், தவறான பொருளாதார கொள்கையால் உருவான தாராளமயம் ஆகிய இரண்டும் ஒடுக்கப்பட்டோரை மேலும் ஒடுக்கப்பட்டோராக மாற்றும் சக்தியாக உருவெடுத்து நிற்கின்றன. அறிவு சார் பல்கலைகழகங்கள் தொடங்கி மக்களின் சேவை சார்ந்த பெரு நிறுவனங்கள் வரை அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் மதவாத சக்திகள், கார்ப்பரேட் சக்திகளின் அதிகாரமே மேலோங்கி நிற்கிறது. எதிர்த்து கேள்வி எழுப்பும் மாணவர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.
அறிவாளர்களை மட்டும் வீழ்த்தாமல் மக்களின் அறிவையும் வீழ்த்த வேண்டும் என்ற வகையில் மக்களை சிந்திக்க வைக்காமல் உரிமைகளுக்காக போராடும் நிலையிலேயே வைத்துள்ளனர். இஸ்லாமியார்கள், தலித்சமூகத்தினர், விவசாயிகள், கம்யூனிஸ்ட்டுகள், மாவோயிஸ்ட்கள் என தனித்தனியாக அவரவர் உரிமைகளுக்காக போராடி வந்தனர். இப்போது அனைவரும் ஒன்று சேர்ந்து மதவாத சக்திகள் பெருநிறுவனங்களுக்கு எதிராக போராடும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக கூறிய மோடி, அதனை செயல்படுத்தவில்லை. மாறாக பெருநிறுவனங்களே அசுர வளர்ச்சி பெற்றுள்ளன.
அதானியின் சொத்துகள் 125 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளன. 75 சதவீதம் இருக்க வேண்டிய சொத்துகள் 9 பெருநிறுவன முதலாளிகள் வசம் உள்ளன. தமிழக அரசியலும், மத்தியில் காங்கிரஸ் மீதும் வாரிசு அரசியல் குறித்த விமர்சத்தை முன் வைக்கும் பிஜேபி, பெருநிறுவனங்களின் முதலாளித்துவத்தின் வாரிசு அரசியலை பற்றி கவலைப்படவில்லை. வரும் தேர்தலில் பாஜ தோல்வியடைந்தாலும், அனைத்து நிலைகளிலும் கட்டமைத்துள்ள ஒடுக்குமுறை பயங்கரவாதம் ஆபத்தாகவே உள்ளன. அடுத்த சில வாரங்களில் பிஜேபியை தூக்கி எறிவதற்கான வாய்ப்பு வர போகிறது.
அதற்கு பின் வரக்கூடிய புதிய ஆட்சியும் இதே கொள்கைகளைத் தான் கடைபிடிக்கும். எனவே சிலரிடம் மட்டுமான சொத்து குவியலை தடுக்க வேண்டும். அவற்றை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க நாம் அனைவரும் போராட வேண்டும். சமநீதி, சம உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றார்.
இந்த மாநாட்டில் கௌரி லங்கேஷ், கல்புர்கி கொலை வழக்கில் கர்நாடக அரசின் சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள தோழர் பாலன் ம.க.இ.க மாநிலச் செயலர் தோழர் மருதய்யன், தோழர் தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆளூர் ஷா நவாஸ் ஆகியோரும் பேசினார்.
இறுதியாக நடைபெற்ற மக்கள் பாடகர் கோவன் பாடல் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மெய்மறக்க செய்தது.