தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே நடப்பனஹள்ளி கிராமத்தில் பெரிய கருப்பு சாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளன்று இந்தக் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் ஆடி அமாவாசையன்று கருப்புசாமி கோயிலில் வினோதமான அபிஷேகங்கள் நடந்தன. கோயில் பூசாரியான கோவிந்தன் என்பவர் அருள் வந்து ஆடியபடியே, நீளமான அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்குக் கூறினார்.
இதையடுத்து பக்தர்கள், கோவிந்தன் மீது மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். அதன்பிறகு அவருக்குப் பால் அபிஷேகமும் செய்தனர். மேலும், மதுபானங்களையும் விதவிதமான சுருட்டுகளையும் வைத்துப் படைத்தனர். அபிஷேகங்கள் முடிந்த பிறகு, பூசாரி கோவிந்தன் பக்தர்களின் குடும்பப் பிரச்சனைகள் அகலவும், தீய சக்திகள் விலகவும், வியாபாரம், கடன் பிரச்சனைகள் தீரவும் அருள்வாக்குக் கூறினார். கோயிலில் பக்தர்கள் ஆடு, கோழிகளைப் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கேயே உணவு சமைத்து அனைத்து பக்தர்களுக்கும் பரிமாறப்பட்டது.