தமிழ்நாட்டில் பரவலாக அங்காளம்மான் கோயில்கள் உள்ளன. அதிலும், குறிப்பாக வட மாவட்டங்களில் இந்த கோயில்கள் அதிகம். இதற்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தொடங்கி கோடை காலம் முடியும் வரை திருவிழாக்கள் நடைபெறும். அதேபோல், ஒவ்வொரு கிராமத்திலும் அங்காளம்மனுக்கு வினோதமான வழிபாடுகளை செய்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக திருவிழாக்களுக்கு தடை செய்திருந்தது அரசு. தற்போது தடைகள் நீக்கப்பட்ட நிலையில், கிராமந்தோறும் கோயில் திருவிழாக்கள் பிரமாண்டமாக நடைபெற ஆரம்பித்துள்ளன. அதிலும் அங்காளம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டு நிமிலி கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நேற்று மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட சிங்க வாகனத்தில் அங்காளம்மன், ஊரிலிருந்து புறப்பட்டு ஏராளமான பக்தர்களுடன் மயானத்தை நோக்கி புறப்பட்டது. மயானம் வந்தடைந்ததும் அங்கு கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பலியிடப்பட்ட ஆட்டின் ரத்தம் கலந்த சோறு, சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்டவை வைத்து படையல் நடத்தப்பட்டது. அந்த ரத்த சோறை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் எனும் நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது. அதனால், ஏராளமானோர் அந்த சோறை வாங்கி சாப்பிட்டனர். அதேபோல் இறந்து போன முன்னோர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள், பீடி, மது உள்ளிட்டவற்றையும் மக்கள் மயானத்தில் வைத்து வழி பட்டனர்.
இதைத்தொடர்ந்து குழந்தை ஏலம் விடும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் இந்த அம்மனிடம் வந்து வேண்டி பலி சோறு சாப்பிட்டு அதன் பலனாக குழந்தை பாக்கியம் கிடைத்த பெண்கள், தங்கள் குழந்தைகளை இங்கு கொண்டு வந்து மயானத்தில் பூசாரியிடம் ஒப்படைப்பார்கள். அப்போது பூசாரி அந்த குழந்தைகளை கூட்டத்தின் மத்தியில் குழந்தை உயரத் தூக்கிப் பிடித்து ஏலம் விடுவார். குழந்தை இல்லாத தம்பதிகள் அந்த குழந்தையை ஏலத்தில் எடுப்பார்கள். அதற்கு ஏலத் தொகையாக பணத்தை கொடுத்து குழந்தைகளை ஏலம் எடுப்பார்கள். அதன்பிறகு சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் குழந்தை கொடுக்கப்படும். இதன் மூலம் ஏலம் எடுப்பவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்படிப்பட்ட வித்தியாசமான அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவிழா காட்டு நிமிலி கிராமத்தில் வெகுவிமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அங்காளம்மனை தரிசித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிட வழிபட்டு செல்கிறார்கள்.