கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்துவரும் நிலையில், நீலகிரி, கோவையிலும் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கோவையில் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை காரணமாக பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 90 அடியைக் கடந்ததால் பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 15.6 சென்டி மீட்டர் மழையும், பந்தலூர் 15 சென்டி மீட்டர் , நடுவட்டம் 13.7 சென்டி மீட்டர், மேல் பவானி 13 சென்டி மீட்டர், கிளன்மார்கன் 11.6 சென்டி மீட்டர், எம்ரால்டு 9.3 சென்டி மீட்டர், கூடலூர் 8.5 சென்டி மீட்டர், மேல்கூடலூர் 8 சென்டி மீட்டர் மழையும் பொழிந்துள்ளது.