பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. ‘பிங்க் அக்டோபர்’ என அழைக்கப்படும் இம்மாதத்தில், உலகம் முழுவதும் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புற்றுநோய் கண்டறிதல் சோதனைகளை மேற்கொள்ளவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்தவகையில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி, தமிழக அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய 'வரும் முன் காப்போம்' திட்டத்தின் மூலம் சென்னையில் பில்ரோத் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்வு இன்று நடத்தப்பட்டது.
கொளத்தூர் மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்வர், மு.க. ஸ்டாலின் பங்கேற்று, பில்ரோத் மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்ட மொபைல் அல்ட்ராசவுண்ட் மேமோகிராஃபி வேனை கொடியசைத்துத் துவங்கி வைத்தார். இந்த மேமோகிராஃபி வேன் மூலம், அடுத்த 15 நாட்களில் தமிழகத்தின் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்று, 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குப் புற்றுநோய் சோதனைகள் மேற்கொள்வது, நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை மருத்துவ குழுவினர் செய்ய உள்ளனர். கொளத்தூரில் நடைபெற்ற இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், எம்.ஆர். சேகர்பாபு மற்றும் பில்ரோத் மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜேஷ் மற்றும் டாக்டர் கல்பனா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.