திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக காவல் நிலையங்களில் புகார் வந்த வண்ணம் இருந்தது. இதன்மீது புகார்கள் எதுவும் பதிவு செய்யாமல் காவல்துறை குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வந்தது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி வாணியம்பாடி நகரத்தில் அடிக்கடி திருடு போகும் பகுதிகளில் காவல்துறை மற்றும் தனிநபர்கள் வைத்துள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் பார்த்து ஆய்வு செய்து வந்தனர். ஒரு வீடியோ பதிவில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே கையில் கட்டுடன் வரும் ஒரு வாலிபர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கழுத்தில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த கையை எடுத்துவிட்டு அங்கிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை லாவகமாக சாவியில்லாமல் திறந்து எடுத்துக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
யார் அந்த மர்ம நபர் என போலீசார் விசாரணையை நடத்தினர். அந்த காட்சியை சமூக ஊடகங்களில் போலீசார் பரப்பினர். அந்த நபர் குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. தகவலின் அடிப்படையில் அந்த நபர் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. அவனை போலீசார் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறினர். அவன் பதுக்கி வைத்திருந்த மூன்று இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து அவன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
அந்த நபர் வேறு ஏதாவது குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா, வேறு எங்காவது வாகனங்களை திருடியுள்ளாரா, தனியாளா அல்லது பின்னணியில் திருட்டு கும்பல் ஏதாவது உள்ளதா? திருடிய வாகனங்களை எங்கு விற்பனை செய்கிறான் என போலீஸ் தனிப்படை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
கையில் அடிபட்டதைப்போல் கட்டுப்போட்டுக் கொண்டு ஊரில் வலம் வந்து அய்யோ பாவம் என தன்னை பார்ப்பவர்களை ஏமாற்றியபடி இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டவன் கேமரா கண்களில் சிக்கி கைதாகியுள்ளான்.