Skip to main content

800 ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்பு விஞ்ஞானி; தமிழக அரசு மரியாதை!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

River water connection scientist 800 years ago ...!

 

மனித குலத்தில் அறிவியல், விஞ்ஞான பார்வை, புதிய கண்டுபிடிப்புக்கள், அதை செயல்படுத்துவது என பல சாதனைகளை செய்த வரலாற்றில் தமிழன் தொடக்கம் தொட்டே முதன்மையான பங்கு வகித்து வருகிறான்.

 

இந்தியா முழுக்க பசுமையாய் செழிக்க கங்கையையும் காவிரியையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இருந்து வருகிறது. ஆட்சிகள்தான் மாறியது. இதுவரை ஒவ்வொரு ஆற்றின் அருகே ஓடும் ஆறுகளையோ அல்லது வாய்க்கால்களைக்  கூட இணைக்கவில்லை. ஆனால் ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தமிழன் நதி நீர் இணைப்பை செயல்படுத்தி பல லட்சம் மக்களுக்கும், விவசாய பூமிக்கும் பாசன நீர் வழங்கி தமிழ் சமூகம் போற்றத்தக்க ஒரு மாமனிதனாக வாழ்ந்துள்ளார் அவர். ஆம் அவர்தான் காளிங்கராயன்.

 

ஈரோடு மாவட்டம் பவானியில் இடதுபுறம் காவேரி ஆறும், வலது புறம் பவானி ஆறும் ஒடுகிறது. இதன் எல்லையான கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆறு காவிரி ஆற்றுடன் கலந்து செல்கிறது. இப்படி பவானி ஆறு காவிரியுடன் கலக்கும் அரை கிலோ மீட்டருக்கு முன்பு ஒரு அணையை கட்ட முடிவெடுத்த காளிங்கராயன், அணை கட்டுவதற்கு முன்பே காவிரி ஆறு செல்லும் பகுதியையொட்டி வாய்கால் வெட்ட ஆரம்பித்தார். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலம் பயன்பெறும் வகையில் பவானியில் இருந்து ஈரோடு மற்றும் கொடுமுடி வரை சுமார் 57 கிலோ மீட்டர் நெளிந்து, வளைந்து, மேடான பகுதிக்கும் நீர்ஏறிச் செல்வது போல் அமைத்து வாய்காலைவெட்டி முடித்து வாய்க்காலின் கடைகோடி நீர் கொடுமுடியை தாண்டி செல்லும் நொய்யல் ஆற்றில் கலக்கும் வகையில் உருவாக்கினார்.

 

ஏறக்குறைய பத்து பதினைந்து ஆண்டுகளாக இந்த வாய்கால் வெட்டப்பட்டிருக்கிறது. இதற்கான செலவு எல்லாவற்றையுமே காளிங்கராயனே செய்துள்ளார் என்பதுதான் ஆச்சியரியமான அபூர்வமான செய்தி. இறுதியில் வாய்க்கால் வெட்டப்பட்டு பவானியில் ஆற்றில் அணையை கட்டி அந்த இடத்திற்கு அணைக்கட்டு என பெயர் வைக்கப்பட்டு ஜனவரி 18ந் தேதி காளிங்கராயன் வெட்டிய வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. 

 

இப்படிப்பட்ட நீர் விஞ்ஞானியான காளிங்கராயனுக்கு அணைக்கட்டு பகுதியில் மணிமண்டபம், வெள்ளோடு பகுதியில் சிலை, ஒவ்வொரு வருடமும் ஜனவரி 18 அன்று அரசு சார்பில் மரியாதை என கலைஞர் முதல்வராக இருந்த போதிருந்தே நடந்துவருகிறது. இவ்வருடமும் அரசு சார்பில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, அரசு கேபிள் வாரிய தலைவர் குறிஞ்சி சிவக்குமார் உட்பட எம்.எல்.ஏ.க்கள் பலரும் கலந்து கொண்டு மலர் மரியாதை செலுத்தினார்கள். 

 

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறும்போது, "1283 ஆம் ஆண்டு இதே தினத்தில் பவானி ஆற்றை தடுத்து காளிங்கராயன் அணை கட்டி 57 கிலோ மீட்டர் தூரம் பாசன பகுதியை உருவாக்கி நொய்யல் ஆற்றில் வாய்க்காலை இணைத்தவர் காலிங்கராயன். எந்த விஞ்ஞான வளர்ச்சியும், தொலைத்தொடர்பு சாதனமும் இல்லாத காலத்திலேயே நதிநீர் இணைப்பை சாத்தியப்படுத்திக்காட்டியுள்ளார் காலிங்கராயன். அவரது புகழை போற்றும் வகையிலேயே காளிங்கராயர் தினம் தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்