மீசைக் கவிஞன் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் நான்காயிரம் வண்ண விளக்குகள் கொண்டு அமைக்கப்பட்ட பாரதியாரின் முழு உருவம் அனைவரையும் கவர்ந்தது. பள்ளி மைதானத்தில் 150 அடி உயரம், 50 அடி அகலம் என மொத்தம் 7,500 சதுர அடியில் கையில் தடியுடன் பாரதியார் நிற்பது போன்ற கம்பீரமான உருவம் அமைக்கப்பட்டது.
இதற்கு நான்காயிரம் எல்.இ.டி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 50 மாணவர்கள் பாரதி வேடமணிந்து அவரின் பொன்னான கவிதை வரிகளை எடுத்துரைத்தனர். இதுதவிர 25 மாணவிகள் பாரதியாரின் உருவப்படம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து கொண்டு பாரதியின் பாடல்களைப் பாடினர். இந்த நிகழ்ச்சியில் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது வாழ்க்கை குறிப்புகள் தொடர்பான புகைப்படங்கள், பெண் விடுதலை-சமத்துவம் பற்றிய அவரின் புரட்சிகர கவிதைகள் அடங்கிய பதாகைகள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் எவர்வின் பள்ளியின் சி.இ.ஓ மகேஸ்வரி, மூத்த முதல்வர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாரதியார் நினைவு நாள் இனி மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.