தமிழகத்தில் பாரதீய ஜனதா தான் ஆட்சி நடத்தி வருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
விமான நிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்குள் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
திருச்சி விமானநிலையத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக என் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். அன்றைய தினம் சம்பவ இடத்திலேயே நான் இல்லை. ஆனால் என் மீது 2 வழக்குகள் பொய்யாக புனையப்பட்டுள்ளது. என் மீது இன்று, நேற்று அல்ல. 10 வருடமாக வழக்குகள் போட்டு வருகிறார்கள். இவ்வாறு வழக்கு போடுவது அரசின் இயலாமையையும், தோல்வியையும் தான் காட்டுகிறது. தொட்டதற்கெல்லாம் வழக்கு போட்டு சிறையில் தள்ள நினைக்கிறார்கள்.
சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது இந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். மொத்தமாக 18 எம்.எல்.ஏ.க்களும் நீக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளிக்கப்பட்டால் இந்த ஆட்சி கேள்விக்குறியாகிவிடும் என்பதால், இப்படி ஒரு தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பாரதீய ஜனதா தான் ஆட்சி நடத்தி வருகிறது.
நீண்டகாலமாக சட்டமன்ற, பாராளுமன்ற ஜனநாயகம் இல்லை. நீதிமன்ற ஆட்சி முறை தான் உள்ளது. நீதிமன்றத்தில் கேட்டு தான் எதனையும் பெறவேண்டிய நிலை உள்ளது. நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை எப்போதோ முடிவுக்கு வந்து விட்டது. இவ்வாறு கூறினார்.