திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 54 பணியிடங்கள் நிரப்புவதற்காக நேர்காணல் நடைபெற இருந்த நிலையில் திடீர் என நிறுத்தி வைப்பதாக பல்கலைகழக நிர்வாகம் அறிவித்து இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்கலைகழகத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே நடக்கும் பனிப்போர் தான் காரணம் என்கிற பேச்சு பரபரப்பாக நிலவி வருகிறது.இந்த நிலையில் இது குறித்து என்ன நடக்கிறது என்று விசாரணையில் இறங்கினோம்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 28 துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக 14 பேராசிரியர்கள் 14 இணை பேராசிரியர்கள் 26 உதவி பேராசிரியர்கள் என்று 54 பேர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த 54 காலி பணியிடங்களுக்கு 1358 விண்ணப்பங்கள் வரப்பெற்று தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். உதவி பேராசிரியர்களுக்கு வரும் 21ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நேர்காணல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப்போல பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர்களுக்கு 22, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட இருந்தது.
இந்த நிலையில் தான் இந்த தீடீர் என நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த போது.. பாரதிதாசன் பல்கலைகழகம் - தமிழக அரசுக்கும் இடையே நீயா ? நானா ? என்கிற அளவிற்கு பெரிய யுத்தமே நடைபெறுகிறது என்கிறார்கள் பல்கலைகழக பேராசிரியர்கள் வட்டாரத்தில்..
பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான இட ஒதுக்கீட்டை பொருத்தவரையில் ஒவ்வொரு துறையிலும் ஒரு அலகாக கருதப்பட வேண்டும். 69 சதவீத இட ஒதுக்கீடு 200 புள்ளி ரோஸ்டர் தரும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசில் நீண்டகாலமாக கடைபிடிக்கப்படும் மரபாகும்.
ஆனால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துறைகளுக்கு பதிலாக ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஒரே அலகாக கருதப்பட்டு 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட அனுமதி வேண்டும் என்று தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு துறையிலும் ஒரு அலகாக கருதி இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதற்கும் ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஒரே அலகாக கருதி இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு துறையையும் அலகாக கருதி இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும் போது ஒவ்வொரு துறையிலும் அனைத்து சமூகத்தினருக்கும் பணி நியமன வாய்ப்பு கிடைக்கும்.
மாறாக ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தின் ஓர் அலகாக கருதி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் ஒரு துறையில் முழுக்க முழுக்க ஒரே இட ஒதுக்கீடு பிரிவினரும் இன்னொரு துறையில் முழுக்க முழுக்க பிற பிரிவினர் ஆசிரியர்களாகவும் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக புகார்கள் எழுந்தன.
ஆட்சிக் குழுவில் துணைவேந்தர் தலைமையில் தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றி பல்கலைக்கழக அலகு முறையை செயல்படுத்த துணைவேந்தருக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்தது. பல்கலைக்கழக அலகு இட ஒதுக்கீட்டு முறை தடுக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் பல்கலைக்கழக அலகு முறையில் பணி நியமனம் செய்ய அரசு தரப்பிலிருந்து ஒப்புதல் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது கவர்னர் அலுவலகம் மூலம் எடுத்த முயற்சிகளுக்கு பின்னும் அரசு தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதனால் நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பல்கலைகழகத்தின் பதிவாளர் பெயரில் நிர்வாக காரணங்களுக்காக பணியிடங்களுக்கான நேர்காணல் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஏற்கனவே சில மீடியேட்டர்கள் மூலம் பணபரிவர்த்தனையும் நடைபெற்றுவிட்டதாக குற்றச்சாட்டும் தற்போது பரவலாக எழுந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.