பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர்கள் நலச்சங்கம், பேராசிரியர்கள் சங்கம் ஆகியவை இணைந்து பல்கலைக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று (13.09.2021) பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் பல்கலைக்கழக நிதியில் இருந்து வழங்கப்பட்ட நிதியை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அந்த நிதியை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு நிதி கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கோரிக்கைகள் நிறைவேறும்வரை இன்றும், நாளையும் பணியாளர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபடுவது என்றும் வருகிற 16, 17ஆம் தேதிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது, 20, 21 ஆகிய தேதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.