தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய பி.எட் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று பி.எட் இரண்டாம் ஆண்டு 4வது செமஸ்டர், "creating an inclusive school" என்ற பாடத்திற்கான தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில், காலை 10 மணிக்கு தேர்வு நடக்கவிருந்த இந்த பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு உயர்கல்வி துறையின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, கசிந்த வினாத்தாள் திரும்ப பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உயர் கல்வித்துறை அறிக்கையில், காலை 9.15 மணிக்குள் புதிய வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், பழைய வினாத்தாளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தேர்வு மையங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.