திருச்சி மாவட்டம், பச்சமலையை ஒட்டிய கிராமம் சின்ன இலுப்பூர். தேவையான மின் வசதி, கழிப்பிட வசதி, இணைய வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமம்தான், இந்த சின்ன இலுப்பூர். இங்கு வாழும் பழங்குடி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். கேரளாவில் கூலி வேலை செய்கிறார். இவரது மனைவி வசந்தி. பச்சைமலையில் விவசாயம் செய்து வருகிறார். இந்த தம்பதியின் மூன்றாவது மகள், ரோகிணி.
இந்த கிராமத்தில் பழங்குடியின மக்களின் குழந்தைகள் பயில்வதற்காக அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்2 முடித்த மாணவி ரோகிணி, சமீபத்தில் ஜேஇஇ போட்டி தேர்வில் கலந்து கொண்டார். தாயுடன் வீட்டில் இருப்பதால் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளையும் படிப்பு வேலைகளையும் அவரே பார்க்கவேண்டிய சூழல். இதனால் படிப்பில் சோர்ந்துபோகாத ரோகிணி, துடிப்புடன் படித்து வந்துள்ளார். இதைக் கவனித்த பள்ளி ஆசிரியர்கள், ரோகிணியை மேலும் படிக்குமாறு ஊக்குவித்துள்ளனர். தற்போது அதன் முடிவுகள் வெளியான நிலையில், ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இதனால் அவர் திருச்சி என்ஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் சேர்ந்து பயில தேர்வாகி உள்ளார். இதன்மூலம், திருச்சி என்ஐடியில் படிக்கும் வாய்ப்பு பெற்ற முதல் பழங்குடியின மாணவி என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
இதுகுறித்து மாணவி ரோகிணி கூறும்போது, “மலைவாழ் மக்களுக்கான பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்து ஜே.இ.இ தேர்வு எழுதினேன். அதில் தேர்ச்சி பெற்று, திருச்சி என்.ஐ.டியில் சேர்க்கை பெற்றுள்ளேன். பி.இ., கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்து உள்ளேன். என் படிப்புக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. பள்ளியில் படித்த போது என்ஐடி கெமிக்கல் ஆய்வகத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, ஆசிரியர்களிடம் என்.ஐ.டியில் சேர்க்கை பெற வேண்டும் என்று கேட்டேன். பள்ளியில் பிளஸ் டூ தேர்விலும் ஜேஇஇ தேர்விலும் தேர்ச்சி பெற்றதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி உதவி செய்தனர். என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மேல்படிப்புக்கு உதவி செய்யும் முதல்வர் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதே போன்று, சேலம் மாவட்டம் கரியகோவில் வளவைச் சேர்ந்த பூச்சான்-ராஜம்மாள் ஆகியோரின் மகள் சுகன்யா. பழங்குடியின மாணவியான சுகன்யாவும் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் திருச்சி என்.ஐ.டியில் புரொடக்ஷன் என்ஜினியரிங் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜம்மாள் இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தையடுத்து, பெரியம்மா பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவர், தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட இலவச நுழைவுத் தேர்விற்கான பயிற்சியில் கலந்துகொண்டார். இதையடுத்து, சேலத்தில் ஜேஇஇ நுழைவுத்தேர்வை எழுதி, மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற சுகன்யாவிற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வென்று திருச்சி என்.ஐ.டி யில் பயில போகும் அன்புத்தங்கை சுகன்யா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். "கல்வி ஆகச்சிறந்த செல்வம்" அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை, தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், திருச்சி கைலாசபுரத்தைச் சேர்ந்த கவினி என்ற மாணவி, ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வென்று கட்டிடக்கலை பிரிவை தேர்வு செய்துள்ளார். முத்தரசநல்லூரைச் சேர்ந்த மாணவி ரித்திகா கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கும், பூலாங்குடியை சேர்ந்த மாணவி திவ்யாபிரீதா, கைலாசபுரத்தை சேர்ந்த தனுஷ் ராஜ்குமார் பங்காரு ஆகியோர் புரொடக்ஷன் என்ஜினியரிங் பிரிவில் சேர்வதற்கும் திருச்சி என்ஐடி கல்லூரியில் பதிவு செய்துள்ளனர். கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக பழங்குடியின மாணவர்கள் 6 பேர் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.