Skip to main content

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர்கள்; பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை!

Published on 30/08/2024 | Edited on 30/08/2024
Bar Council action for lawyers Arrested in Armstrong case

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் 8க்கும் மேற்பட்டவர்கள் வழக்கறிஞர்கள் ஆவர். அதே சமயம் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட சுமார் 200 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Bar Council action for lawyers Arrested in Armstrong case

இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் ரவுடிகளான சீசிங் ராஜா மற்றும் சம்போ செந்திலை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரன், அசுவத்தமன், சிவா மற்றும் ஹரிதரன் ஆகிய 4 வழக்கறிஞர்கள் இந்த வழக்கு முடியும் வரை வழக்கறிஞராகத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழ்நாடு - புதுச்சேரி  பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அதோடு சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட செந்தில்நாதன், சக்திவேல், விஜயகுமார், விமல் மற்றும் தினேஷ்குமார் ஆகிய 5 வழக்கறிஞர்களுக்கும் வழக்கறிஞராகத் தொழில் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்ற வழக்கு ஒன்றில் தண்டனை விதிக்கப்பட்ட கோவிந்தராஜன், முகநூலில் ஆபாச கருத்து வெளியிட்ட மணியரசன் ஆகியோருக்கும் வழக்கறிஞராகத் தொழில் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தமிழ்நாடு - புதுச்சேரி  பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்