தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களது ரசிகர்களைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் பார்வையும் தற்போது 'வாரிசு' மற்றும் 'துணிவு' படங்களை நோக்கி உள்ளது.
இருவரின் ரசிகர்களும், அவர்களது விருப்ப நடிகர்களின் படங்கள் தனித்தனியே வெளியானாலே பேனர், பட்டாசு என்று திருவிழாவாகவே மாற்றிவிடுவார்கள். இப்போது இருவரின் படங்களும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாக வெளியாகியுள்ளதால், திரையரங்கம் மற்றும் முக்கியமான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பேனர், போஸ்டர், பட்டாசு என்று போட்டிப் போட்டு பட்டையைக் கிளப்பி வருகின்றனர். அதன்படி அஜித்தின் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கும், விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் சிறப்புக் காட்சிகளாகத் திரையிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மாறி மாறி பேனர்களைக் கிழித்தெறிந்துள்ளனர். அஜித் ரசிகர்கள் துணிவு படம் பார்க்க உள்ளே சென்றபோது, விஜய் ரசிகர்கள் துணிவு பட பேனரை கிழித்துள்ளனர். படம் முடிந்து வெளியே வந்த அஜித் ரசிகர்கள், துணிவு பட பேனர் கிழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், விஜய்யின் வாரிசு பட பேனர்களை அடித்து துவம்சம் செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டு ரசிகர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.