Skip to main content

பிளாஸ்டிக் குடோனுக்கு அதிகாரிகள் வைத்த சீல்... இரவில் திருட முயன்ற உரிமையாளர்

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம், சிறை தண்டனை, தொழில் அங்கீகாரம் ரத்து போன்றவை செய்யப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை மூன்று மாதங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றியது அரசாங்கம். முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசுத்துறைகள் பின்னர் அதிரடியாக நடவடிக்கை எடுக்க துவங்கியது. இதனால் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்துவது வெகுவாக குறைந்தது. 

 

plastic

 

கார்பரேட் கம்பெனிகள் எண்ணெய், சோப்பு, ஷாம்பு என பலதரப்பட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் தான் பேக் செய்து அனுப்புகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சாதாரண வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர். இதனால் என்ன செய்வது என யோசித்த அரசாங்கம், புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுங்கள் மற்றப்படி கண்டுக்கொள்ளாதீர்கள் என சொல்லிவிட்டது. இதனால் மீண்டும் பரவலாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. 
 

இந்நிலையில் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்துக்கு போன் செய்த ஒருவர், மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கூறியுள்ளார். அந்த தகவலை அடுத்து நகராட்சி ஆணையர் சுரேந்திரன் தலைமையில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத் கன்னா ஆகியோர் ஆய்வு நடத்தி சுமார் 540 கிலோ பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பைகள் அடங்கிய பெட்டிகளை கைப்பற்றினர். 
 

அதேபோல், காயிதேமில்லத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த வீட்டிற்கு சென்றனர். அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருப்பதாகவும், நாளை வந்து வீட்டிற்கான சாவி ஒப்படைப்பதாக தகவல் தெரிவித்தார்கள் அதைத் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் நகராட்சியால் வீட்டுக்கு பூட்டு  போடப்பட்டது. காலை அந்த இடத்தில் மீண்டும் ஆய்வு நடக்கும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார். அந்த வீட்டுக்கு முன்பு போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார். 
 

இரவு 11 மணியளவில், நகராட்சியால் பூட்டப்பட்ட வீட்டின் பின்புறம், உள்ளே பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை வெளியே கொண்டு செல்ல முயற்சி நடைபெற்றது அங்கு  காவல்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் வரவும் மர்ம நபர்கள் மூட்டையை அங்கேயே போட்டு விட்டு ஓடிவிட்டனர் பிறகு காலை நகராட்சி ஆணைர் சுரேந்திரன் அவர்கள் முன்னிலையில் வீட்டின் உரிமையாளரை வரவழைத்து வீட்டைத் திறந்து பார்த்தபோது அங்கு தடை செய்யப்பட்ட சுமார் இரண்டரை டன் அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்தனர் அதிகாரிகள்.
 

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட இடங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர் நகராட்சி அதிகாரிகள். இது வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்