திண்டுக்கல்லில் உள்ள தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் இன்று காலையில் நான்கு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கலீல் ரகுமான் கையில் மிளகாய் பொடி, ஸ்பிரே, கட்டிங் பிளையர் உட்பட ஆயுதங்களுடன் உள்ளே சென்றுள்ளார். பணியில் இருந்த ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ஸ்பிரே அடித்துள்ளார். பின்னர், தான் கொண்டு வந்த கயிற்றால் வங்கி ஊழியர்கள் 3 பேரின் கைகளையும் கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றுள்ளார்.
அப்போது வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து பொதுமக்களைப் பார்த்து கொள்ளை கொள்ளை எனக் கூச்சலிட்டு அழைத்துள்ளார். பின்னர், பொதுமக்கள் வங்கியின் உள்ளே சென்று கலீல் ரகுமானை பிடித்தனர். திண்டுக்கல் மேற்கு காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கொள்ளையடிக்க முயன்ற கலீல் ரகுமானை திண்டுக்கல் மேற்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், வாழ்க்கையின் விரக்தியில் இருக்கிறேன். தற்போது வெளியாகியுள்ள துணிவு படத்தைப் பார்த்தேன். அதில், வங்கியில் கொள்ளையடிக்கும் நிகழ்வு நடக்கும். மேலும் சில படங்களைப் பார்த்தேன் எனத் தெரிவித்துள்ளார். பகல் நேரத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.