சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வங்கி ஊழியர், என் சாவுக்கு ஓய்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐயும், அவருடைய குடும்பத்தினரும்தான் காரணம் என செல்போனில் உருக்கமான மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பொன் நகரைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (48). சேலம் சீரங்கபாளையத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி இமாகுலேட்மேரி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மோகன்தாஸின் சொந்த ஊர், கடலூர் மாவட்டம் ஆகும். பணி நிமித்தமாக கடந்த பத்து ஆண்டுகளாக குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை (ஜூன் 18) காலை, வீட்டில் இருந்த மோகன்தாஸ், மேல் தளத்தில் உள்ள அறைக்குள் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் அந்த அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், அறையின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அங்கு அவர் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. காவல்துறைக்கு தெரியவந்தால், விசாரணை, உடற்கூராய்வு என்று அலைக்கழிப்பார்கள் என்று கருதிய குடும்பத்தினர், மோகன்தாஸ் மாரடைப்பால் இறந்து விட்டதாக அக்கம்பத்தினருக்குச் சொல்லி நம்ப வைத்துள்ளனர். மேலும், இறுதிச் சடங்கிற்கான வேலைகளையும் செய்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மோகன்தாஸ், தனது செல்போனில் பதிவு செய்திருந்த காணொளி வாக்குமூலம், சமூக ஊடகங்களில் வேகமாக பரவத் தொடங்கியது. அதில், சூரமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றி, கடந்த மே மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றுவிட்ட சிறப்பு எஸ்.ஐ சேகர், அவருடைய மனைவி சாந்தி, மகள் ஆகியோர்தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த சூரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோகன்தாஸ் பதிவு செய்திருந்த காணொளியில், ''நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த 40 பவுன் நகைகளை என் மனைவி எந்தவித ஆதாரமும் இல்லாமல் பிறரிடம் கொடுத்து விட்டார். அவரவர் தேவைக்கு வாங்கிச் சென்று விட்டனர். நகைகளை மீட்டுக் கொடுக்கும்படி சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தேன். அதன்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சூரமங்கலம் எஸ்.எஸ்.ஐ சேகருக்கு சாதகமாக பேசினர். என் மகள் 12ம் வகுப்பும், மகன் பத்தாம் வகுப்பும் முடித்துவிட்டனர். அவர்களை மேற்கொண்டு படிக்க வைக்க என்னிடம் பணம் இல்லை. பணத்தை புரட்ட முடியாததால், குழந்தைகளை மேற்கொண்டு படிக்க வைக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.
எஸ்.எஸ்.ஐ சேகர், அவருடைய மனைவி சாந்தி, மகள் ஆகியோர்தான் என் தற்கொலைக்குக் காரணம். ஆகவே, தீர விசாரித்து, அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள். தயவு செய்து கெஞ்சி கேட்கிறேன்.
குமாரின் மனைவி அனுசுயா, 12 பவுன் நகைகளை வாங்கியுள்ளார். எங்களிடம் ஏமாற்றி வாங்கிய நகை, பணத்தை அவர்களிடம் இருந்து பெற்று, எனது குழந்தைகளின் படிப்புக்கு உதவுங்கள். சட்டம் அவர்களை தண்டிக்கும். டி.ஜி.பி, முதல்வரின் தனிப்பிரிவு ஆகியோரிடம் புகார் அளித்தும் யாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாரிடமும் புகார் அளித்தாலும் என்னை ஒன்றும் செய்து விட முடியாது என எஸ்.எஸ்.ஐ சேகர் மிரட்டல் விடுத்தார்'' என்று மோகன்தாஸ் காணொளி பதிவில் கூறியிருந்தார்.
இந்தக் காணொளி காட்சி, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. காணொளியில் கூறியுள்ள நபர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.