தமிழக காவல்துறை இயக்குநர் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களின் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு இது தொடர்பாக உத்தரவிட்டார். அந்த உத்தரவில், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கி, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கஞ்சா தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், கஞ்சா தொழில் மூலம் வாங்கிய சொத்துக்கள் அனைத்தையும் முடக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்பேரில் திருச்சி மாநகரம் கண்டோன்மெண்ட் காவல் சரகத்திலுள்ள கஞ்சா விற்பனையாளர்கள் கண்டறியப்பட்டு 9 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் பலரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட உள்ளது. திருச்சி மாநகர முழுவதும் கஞ்சா வியாபாரத்தை ஒழிக்க, அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்படுவார்கள் எனவும், கஞ்சா விற்பனையாளர்கள் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.