Skip to main content

வேங்கைவயல் சம்பவம்; மகிளா நீதிமன்றம் புதிய உத்தரவு

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

Banana field incident; Mahila Court New Order

 

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக்கட்டத்தில், குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை நெருங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க நினைக்கிறது போலீஸ், அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு சொன்னபோது, இந்த விசாரணைக் குழுவையும் மாற்ற வேண்டும் இந்தக் குழுவும் எங்களையே குற்றவாளிகளாக மாற்றப் பார்க்கிறது என்று வேங்கைவயல் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 

 

ஆனால் இந்த சம்பவம் நடந்து 120 நாட்களுக்கும் மேல் ஆகும் நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 144 பேரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்ட நிலையில் தமிழக அரசு தனி நீதிபதி சத்யமூர்த்தி தலைமையில் ஆணையம் ஒன்றையும் அமைத்தது. 

 

தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர், விசாரித்ததில் 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தை நாடினர். குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவில் எடுத்த மாதிரியைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளும் போது குற்றவாளிகளை நெருங்க முடியும் என நீதிமன்றத்தில் கூறினர். தொடர்ந்து மகிளா நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், வேங்கைவயலைச் சேர்ந்த 9 நபர்கள், கீழமுத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அதேபோல் காவிரி நகரைச் சேர்ந்த ஒருவர் என 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள உதவுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் உதவிப் பேராசிரியருக்கு 18 ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.

 

இந்த சோதனைக்கென பார்த்திபன் என்ற அதிகாரியையும் நீதிபதி நியமித்துள்ளார். இந்த சோதனை நடத்தி முடிவுகளை சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிடுவார்கள். இதன்பின் சிபிசிஐடி அதிகாரிகள் அந்த மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி ஏற்கனவே எடுக்கப்பட்ட மாதிரியுடன் சோதனை செய்ய உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்