புதுச்சேரி பெரிய மார்க்கெட் குபேர் அங்காடியில் மீன் சில்லறை மற்றும் மொத்த விற்பனை நடைபெற்று வந்த நிலையில் மொத்த விற்பனைக்கு மாவட்ட ஆட்சியர் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தடை விதித்தார்.
இந்நிலையில் மீன் வியாபாரிகள் மற்றும் மீனவப் பெண்கள் மொத்த விற்பனையை செய்வதை தடுக்க அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு மொத்த விற்பனை நடைபெறாதவாறு தடுத்தனர். இதனால் மீன்கள் விற்பனை செய்ய முடியாததால் மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் மூலம் அரசுக்கு தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மொத்த விற்பனைக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்ததை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மீன் விற்பனை செய்யும் பெண்கள் மற்றும் மீன் வியாபாரிகள் மீன் அங்காடியில் அமர்ந்து உள்ளிருப்பு மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீன் விற்பனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மேலும் மீன் வியாபாரிகள் வேறு ஏதேனும் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.