வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இந்த அறிவிப்பை அடுத்து பொங்கல் பரிசு எல்லா இடங்களிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக பொதுநல வழக்கொன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கில் எல்லா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்படுவதால் அரசிற்கு கூடுதலாக 2000 கோடி ரூபாய் செலவாகிறது. எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இன்று தற்போது நடந்த விசாரணையில் இந்த பொங்கல் பரிசை அரசு வழங்குவதன் நோக்கம் என்ன. கட்சி பணம் என்றால் இந்த கேள்விகள் எழாது ஆனால் இது அரசு பணம். அரசு கொள்கை முடிவென்றால் யாரும் கேள்விகேக்கக்கூடாது என நினைக்கக்கூடாது. எனவே அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்குவதை விட யாருக்கு இது உபயோகப்படுமோ அவர்களுக்கு வழங்குவதை முன்னரே அரசு முறைப்படுத்திருக்க வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை. வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்க தடை என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பின் மூலம் வெள்ளை நிற ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 1000 ரூபாய் தொகைக்கு மட்டுமே தடை, மற்ற அரிசி, சர்க்கரை, கரும்பு, ஏலம், முந்திரி, திராட்சை பெற எந்த தடையும் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.