ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் பதிவாகி வந்தது. அதே சமயம் அருகில் உள்ள மாவட்டங்களான கோவை, சேலம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. எனினும் ஈரோட்டில் மழை பெய்யாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சத்தியமங்கலம் அடுத்துள்ள செம்மண் திட்டு என்னும் பகுதியில் இரவில் மூங்கில் மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இன்று காலை சத்தியமங்கலம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த மூங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.