கர்நாடகாவின் நந்திதுர்க்கத்தில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக வாணியம்பாடி அருகே தமிழக எல்லைக்குள் நுழைகிறது பாலாறு. அதன்பின் அது ஆம்பூர், மாதனூர், வேலூர், இராணிப்பேட்டை, ஆற்காடு, காவேரிப்பாக்கம், செய்யார், காஞ்சிபுரம் வழியாக சென்று வங்காளவிரிகுடாவில் கலக்கிறது பாலாறு.
வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 180 கி.மீ தொலைவுக்கு பாயும் பாலாற்றில் தண்ணீர் தேங்கி நின்று பலப்பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை எந்த ஆட்சியாளர்களும் பாலாற்றில் தடுப்பணை கட்டி நீரை சேமித்துவைக்க முயலவில்லை. இதுவே ஆந்திரா, கர்நாடகாவில் 80க்கும் அதிகமான தடுப்பனைகளை கட்டி கடைமடையான தமிழகத்துக்கு வரும் நீரை தடுத்துவருகிறது. இதனை கண்டித்து பல அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்திவிட்டார்கள், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கும் நடந்துவருகிறது.
பாலாற்றில் வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர்மாநகரம், ராணிப்பேட்டை, ஆற்காடு நகரத்தின் கழிவுநீரும், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான தோல் தொழிற்சாலைகளின் ராசாயம் கலந்த நீரும் பாலாற்றில் சட்டத்துக்கு புறம்பாக கலக்கவிடுவதால் நிலத்தடி நீர் மட்டம் மாசடைந்துவிட்டது. இதனால் பாலாற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் துவர்ப்பாகவே உள்ளது, பல நோய்கள் வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிப்பதாக சமூக நல ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.
இதுமட்டும்மல்லாமல் பாலாற்றில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் மணல் அள்ளி தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்தி சென்று கொள்ளை லாபம் அடைகின்றன. இந்த காரணங்களால் வேலூர் மாவட்ட சமூக சேவர்கள் இணைந்து பாலாறு பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்றை தொடங்கி நடத்துகின்றனர். இந்த சங்கத்தின் சார்பில் வேலூர் நாடாளமன்ற தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாலாறு பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகியொருவர் நம்மிடம், அதிமுக, திமுக இரண்டு கட்சியும் பாலாறு பாதுகாப்பது தொடர்பாக எந்த வாக்குறுதியும் தரவில்லை. அதனால் ஆம்பூர் வெங்கடேசன் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம் என்றார்.
இது தொடர்பாக நாம் வேறு சிலரிடம் விசாரித்தபோது, பாஜக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக, இவர்கள் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள். திமுக தனது தேர்தல் அறிக்கையில் பாலாற்றில் நீரை தேக்க தடுப்பணை கட்டப்படும் எனச்சொல்லியுள்ளது. அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் பாலாறை பற்றி குறிப்பிடவில்லை. அதோடு, கடந்த 8 வருடங்களாக பாலாற்றை சுரண்டி வருவது அதிமுக பிரமுகர்கள் தான். அதிலும், அமைச்சர் வீரமணியின் பல டாராஸ் லாரிகள் இரவு – பகல் என இல்லாமல் பாலாற்றை சுரண்டுகின்றன. இத்தனைக்கும் பாலாற்றில் மணல் அள்ளக்கூடாது என அரசின் தடை உத்தரவு உள்ளது. அப்படியிருந்தும் அதிமுக பிரமுகர்கள், அமைச்சர் அள்ளுகிறார். இதனை தடுக்க வேண்டும்மென்றால் பாலாறுக்காக குரல் கொடுத்துள்ள, போராட்டம் நடத்தியுள்ள திமுகவுக்கு ஆதரவு தருவது தான் சரியாக இருந்திருக்கும். ஆனால் அதைவிட்டுவிட்டு வேட்பாளரை நிறுத்துவது என்பது அதிருப்தி வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் தடுப்பதற்காக, ஆளும்கட்சிக்காக வேட்பாளர்களை நிறுத்துகிறார்களோ என சந்தேகப்பட வேண்டியுள்ளது என்கிறார்கள்.