தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயிலால் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்பட்டு வந்த நிலையில் நாளை மறுநாள் 10 ந் தேதி திங்கட்கிழமை அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பள்ளி சுற்றுப்புறம், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு திறப்பதற்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் பேட்மிட்டன் விளையாட்டு விடுதி மாணவர்கள் தாங்கள் படித்த பழைய பள்ளிகளுக்கு செல்வதா அல்லது புதிய இடத்திற்கு செல்வதா என சரியான அறிவிப்பு வராததால் பெற்றோர்களும், மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர். விளையாட்டுத்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அதாவது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களை தேர்வு செய்து சென்னை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ள விளையாட்டு விடுதிகளில் தங்க வைத்து பயிற்சி அளிப்பதுடன் அருகில் உள்ள பள்ளிகளிலும் சேர்த்து படிக்க வைக்கிறது தமிழ்நாடு அரசு. இதனால் கிராமப்புற மாணவர்கள் விளையாட்டுகளிலும் சாதித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பேட்மிட்டன் விளையாட்டு பயிற்சிக்காக ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒப்பந்தப்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகளில் தங்கி பேட்மிட்டன் பயிற்சி பெறும் மாணவர்களை வண்டலூரில் உள்ள பெரிய மைதானத்துடன் இணைந்துள்ள விடுதியில் தங்க வைத்து பயிற்சி அளிக்க முடிவெடுத்துள்ளது. அதனால் இனிமேல் ஒரே இடத்தில் பயிற்சி அளிக்கும் முயற்சியிலும் ஆயத்தப்பணியிலும் தனியார் பயிற்சி நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேட்மிட்டன் விளையாட்டு மாணவர்கள் இதுவரை தங்கி இருந்த விடுதிகளுக்கு செல்ல வேண்டுமா? புதிய விளையாட்டு மைதானத்துடன் இணைந்துள்ள விடுதிகளுக்கு செல்ல வேண்டுமா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான அறிவிப்பு கொடுக்காததால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
மேலும், பல மாணவர்கள் பயிற்சி மைதானம் மாறப் போகிறது என்பதால் ஏற்கனவே தாங்கள் படித்த பள்ளிகளில் இருந்து மாற்றுச்சான்றிதழை வாங்கி வைத்துள்ளனர். மேலும் பலர் டிசி வாங்காமல் குழப்பத்தில் உள்ளனர். பழைய விடுதிக்கு போகனுமா வேண்டாமா என்ற குழப்பமும் நீடித்து வருகிறது. ஆகவே, அமைச்சர் உதயநிதியின் துறையின் கீழ் வரும் இந்த விளையாட்டு விடுதி பயிற்சி மாணவர்கள் எப்போது எந்த விடுதியில் வந்து சேர வேண்டும் என்று தெளிவான அறிக்கையை வெளியிட்டால் மட்டுமே விளையாட்டு விடுதி மாணவர்கள், பெற்றோர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்கின்றனர் துறை சார்ந்த அலுவலர்களும், பெற்றோர்களும்.