கரோனாவால் குழந்தை உயிரிழந்ததாக நாடகமாடி குழந்தை விற்கப்பட்ட சம்பவத்தில் காப்பகத்தின் தலைவர் தலைமறைவான நிலையில் குழந்தையை வாங்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் குழந்தை ஒன்று கரோனாவால் உயிரிழந்ததாக போலியான சான்றிதழ்களைத் தயாரித்து குழந்தை மற்றும் தாயை காப்பகத்தில் சேர்த்துவிட்டு, போலியான ஆவணங்களைக் கொடுத்து குழந்தை விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கி நடைபெற்றுவருகிறது. காப்பகத்தின் தலைவர் சிவகுமார் கடந்த 2 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிப்பதற்காக தல்லாகுளம் காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
குழந்தை விற்பனை செய்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த காப்பகத்தின் முக்கிய நிர்வாகியான கலைவாணியை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுரை இஸ்மாயில்புரம் பகுதியில் உள்ள நகைக் கடை உரிமையாளரான கண்ணன் மற்றும் அவரது மனைவி பவானியை தல்லாகுளம் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அதேபோன்று பெண் குழந்தையை விற்பனை செய்தது தொடர்பாக மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இதுவரை மொத்தமாக இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் காப்பகம் செயல்பட்டுவரும் நிலையில், இதற்கு முன் இதேபோல் குழந்தைகள் விற்பனை நடைபெற்றதா என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.